
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் அரைசதம் கடந்ததுடன் 78 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தலா 41 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 36 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் நி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 276 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தரப்பில் நோகுலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் தஸ்மின் பிரிட்ஸ் சதமடித்ததுடன் 109 ரன்களையும், கேப்டன் லாரா வோல்வார்ட் 43 ரன்களையும், அன்னேரி டெர்க்சன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சோபிக்க தவறினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களிலேயே ஆல் அவுட்டானது.