
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது கேன்டர்பரியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கியானா ஜோசப் 2, ஸைதா ஜேம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், ரியலியானா கிரிமண்ட் 4 ரன்னிலும், ஷபிகா கஜ்னபி 11 ரன்னிலும், அலியா அலீன் 2 ரன்னிலும், ஜானிலியா கிளாஸ்கோ 4 ரன்னிலும், மாண்டி மங்ரு 17 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹீலி மேத்யூஸ் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் லாரான் பெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியில் டேனியல் வையட் மற்றும் சோஃபியா டங்க்லி இணை தொடக்கம் கொடுத்தனர்.