
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த லீக் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 57 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.