1-mdl.jpg)
இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று வீரேந்தர் சேவாக், யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட தரமான இளம் வீரர்களை கண்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான வாய்ப்பை வழங்கி அடுத்த சில வருடங்களிலேயே ஆஸ்திரேலியா போன்ற தரமான அணிகளை வீழ்த்தும் உலகத்தரம் வாய்ந்த வெற்றிகரமான அணியாக மாற்றினார். அவரது தலைமையில் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் வெளிநாடுகளில் வெற்றிகளை பெறும் யுக்தியை இந்தியா கற்றது.
சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்றது. அப்படிப்பட்ட மகத்தான கேப்டன்களில் முக்கியமானவராக போற்றப்படும் அவர் கடந்த 2008இல் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி மொத்தமாக விடைபெற்றார். அதன்பின் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்ட அவர் கடந்த 2019இல் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அனைவரின் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.
தனது தலைமை பண்பால் இந்தியாவை வெற்றிகரமான அணியாக மாற்றியதை போலவே பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றதும் அதுவரை யோசித்துக் கொண்டிருந்த இந்தியாவை வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் அடையாளம் காணப்படாமல் வருடம் தோறும் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சம்பள உயர்வுக்கான கையெழுத்தையும் போட்டார்.