
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என மிகப்பெரிய தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இலங்கை சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வரும் செப். 2ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. கடந்த 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையும் கைப்பற்றாத நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை வென்று இந்திய அணி அந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி இந்த ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பும்ரா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரை தாண்டி ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரே கீ பிளேயராக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.