Advertisement

நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan August 19, 2023 • 14:00 PM
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், கடந்த உலகக் கோப்பை தொடர்களை போன்றே பேட்டிங் வரிசையில் 4ஆவது இடத்தில் களமிறங்கும் வீரரை தேர்வு செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. 

இந்த இடத்தில் களமிறங்கி ஆடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கான செயல்முறையில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய அவர், “4ஆவது வரிசையில் களமிறங்கக்கூடிய வீரர் நம்மிடம் இல்லை என்று யார் கூறியது?. அந்த இடத்தில் களமிறங்கக்கூடிய ஏராளமான பேட்ஸ்மேன்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் திலக் வர்மாவை ஒரு விருப்பமாக நான் பார்க்கிறேன். இளம் வீரரான அவருக்கு போதுமான அனுபவம் இல்லை தான். ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை. இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

அவரிடம் அபாரமான திறமை உள்ளது. அச்சமற்ற வகையில் விளையாடக்கூடியவர். இந்திய அணியில் போதுமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இதனால் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷன் ஆகியோர் குறித்து கவலைப்பட தேவை இல்லை. எனவே பயமின்றி கிரிக்கெட் விளையாடலாம். ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்களுக்கு ஏராளமான விருப்ப தேர்வுகள் உள்ளன. அவர்கள் சிறந்த லெவனை அடையாளம் கண்டு தேர்வு செய்ய வேண்டும்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள சில வீரர்களிடம் பேசினேன், அவர்கள், பும்ரா சிறந்த வடிவில் இருப்பதாக கூறினார்கள். பும்ரா மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்துவீச தொடங்கி உள்ளார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு சிறந்த செய்தி. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும். பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரது தாக்குதல்களுடன் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழலும் உள்ளது. இவர்களிடம் மகத்தான திறமை உள்ளது.

உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகியவை இருக்கும். ரிஷப் பந்த் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்வில் இஷான் கிஷன், கே.எல்.ராகுல் ஆகியோரே டிராவிட் மற்றும் ரோகித் சர்மா மனதில் இருக்கக்கூடும். நான் இஷான் கிஷனையே விரும்புவேன். ஏனெனில் அவர், எந்த அணிக்கு எதிராகவும் தொடக்க வீரராக களமிறங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement