
இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முழுமையாக நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் மிக அதிகமாக இருக்கின்றது.
இதுவே இந்தியா அணிக்கு ஒரு தனி அழுத்தத்தையும் நெருக்கடியையும் உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துள்ள 49 சதங்களை விராட் கோலி முறியடிப்பாரா என்கின்ற தனி விவாதமும் கிரிக்கெட் மட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது.
விராட் கோலி தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 46 சதங்கள் விளாசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேற்கொண்டு உலகக் கோப்பை முடிவதற்குள் நான்கு சதங்கள் பெற்று ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சின் சாதனையை விராட் கோலி முறியடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.