
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்கக் கோரும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதற்கு 2022 ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒருவழியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்த அவர் தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். முன்னதாக கடந்த 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்ட அவரது செயல்பாடுகளை பார்த்த எம்எஸ் தோனி கடந்த 2017இல் மொத்த கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடினார்.
பொதுவாகவே வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்களும் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறி தாமாகவே ராஜினாமா செய்த கதைகள் உள்ளது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இரு மடங்கு அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி ஆக்ரோஷம் நிறைந்த கேப்டனாகவும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் எதிரணிகளை வெளுத்து வாங்கினார். அவரது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக மிரட்டிய இந்தியா அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பதிவு செய்து வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் சக்கை போடு போட்டது.
ஆனாலும் உலக கோப்பையை வெல்லவில்லை என்ற காரணத்திற்காக விமர்சனங்களை சந்தித்த அவர் ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல தவறினார். அதனால் மறுபுறம் 5 கோப்பைகள் அசால்டாக வென்ற ரோஹித் சர்மாவை டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என அனைவருமே துடித்தனர். அந்த விமர்சனங்களால் முதல் முறையாக மனதளவில் சோர்வாகி ஃபார்மை இழக்க தொடங்கிய விராட் கோலி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக 2021 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அறிவித்தார்.