
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி மெஹிதி ஹசன், ஜகார் அலி ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 307 ரன்களைச் சேர்த்து, தென் ஆப்பிரிக்காவுக்கு 106 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், 68.06 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.