
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் பிற நாடுகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணிகள் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன.
அதன்படி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரை சமன்செய்திருந்தது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று முல்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி மற்றும் குல் ஃபெரோஸா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபெரோஸோ 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய சித்ரா அமீனும் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முனீபா அலி 33 ரன்களிலும், சித்ரா அமீன் 37 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் கேப்டன் ஃபாத்திமா சனா மட்டுமே 27 ரன்களைச் சேர்த்தார்.