
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களை இருக்கும் நிலையில், வீரர்களின் காயம் சில அணிகளுக்கு பெரிய பின்னடைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பெரிதும் நம்பி இருந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் விரல் உடைந்து வெளியேறினார்.
எப்பொழுதுமே உலகக் கோப்பைத் தொடர் நெருங்கும் பொழுது இப்படியான திடீர் காயங்களால் கிரிக்கெட் ரசிகர்கள் சில அபாயகரமான நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை தவறவிடுவார்கள். இது உலகக்கோப்பையின் சுவாரசியத்தை குறைப்பதாகவே அமையும். இது ஒருபுறம் இருக்க உலகக் கோப்பை தொடர் என்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு துரதிஷ்டம் தொடர்ந்து வரக்கூடிய ஒரு விஷயமாகவே இதுவரையில் வந்திருக்கிறது.
உலகக் கோப்பை தொடரில் அந்த அணி போல் பாதிக்கப்பட்ட ஒரு அணி எதுவுமே கிடையாது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில், நெதர்லாந்து அணியிடம் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு என்கின்ற நிலையில், அந்த அணியிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து, பாகிஸ்தான் அணிக்கு கொடுத்தது தென் ஆப்பிரிக்கா.