
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அறிவிக்க தொடங்கியுள்ளன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் கேசவ் மகாராஜ் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்ட குயின்டன் டி காக் மற்றும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம் இந்தாண்டி எஸ்ஏ20 லீக் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒட்னியல் பார்ட்மேன், ரியான் ரிக்கெல்டன் போன்ற அறிமுக வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.