ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
மேலும் இப்போட்டிக்காக இரு நாட்டு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் அனைவரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க வீரர் பயிற்சி பெறும் வகையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஜூன் 3ஆம் தேதி சசெக்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜிம்பாப்வே அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் உள்ள நிலையில், தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மஹராஜ், லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன்.
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின், பிரையன் பென்னட், பென் கரண், டனகா சிவாங்கா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now