
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும ஒருநாள் போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீர்ர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் அப்துல் மாலிக் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 10 ரன்களுக்கும், அதிரடி வீரர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 ரன்களிலும், இக்ரம் அலிகில் 4 ரன்களிலும், முகமது நபி 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு சதமடிப்பார் என எதிர்பார்க்கபட்ட குர்பாஸ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 89 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.