
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டபடால் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா சில சாதனைகளை படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி, இத்தொடரில் ரபாடா மேற்கொண்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300ஆவது விக்கெட்டை பதிவுசெய்வதுடன், தென் ஆப்பிரிக்க அணிக்காக இச்சாதனையை படைக்கும் 6ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார்.
இதுவரை 63 டெஸ்ட் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 295 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் ஆறாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் தென் அப்பிரிக்க அணிக்காக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டேல் ஸ்டெய்ன், ஷான் பொல்லாக், மக்காயா நிடினி, ஆலன் டொனால்ட் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் உள்ளனர்.