
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடர்களுக்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீயை நியமித்துள்ளனர். அதன்படி ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள், அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரையிலும் சௌதீ ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.