
ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிம் சூப்பர் 4 சுற்றில், தங்களின் கடைசிப் போட்டியில், இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் பாகிஸ்தான் அணியை, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு பின் செப்டம்பர் 17ஆம் தேதி, ஆசியக்கோப்பை இறுதி போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. நேற்று மழையால் பாதிக்கப்பட்ட போட்டி 42 ஓவர்களாக நடத்தப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் எடுத்தது. மழையின் காரணமாக 252 ரன்கள் இலங்கைக்கும் இலக்கு கொடுக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருக்க, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து, கடைசிப் பந்தில் இலங்கை திரில் வெற்றி பெற்றது. இந்த ஆசியக் கோப்பை தொடரில் மிக உறுதியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று பாகிஸ்தான் அணியை பலரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தற்பொழுது வங்கதேச அணிக்கு அடுத்து பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.