
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 2 நாட்கள் பெங்களூருவில் சுமார் 19 மணி நேரங்கள் நடந்த இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டும் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப் பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தின் வாயிலாக சென்னை, மும்பை போன்ற அணிகள் தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் வாங்கி தங்கள் அணியை முழுமைப்படுத்தி உள்ளன.
ஆனால் குஜராத் போன்ற ஒரு சில அணிகள் 90 கோடி ரூபாய்களை செலவழித்து போதிலும் தவறான அணுகுமுறைகள் காரணமாக 25 வீரர்களை முழுமையாக வாங்க முடியவில்லை. இதன்காரணமாக இருக்கும் வீரர்களை வைத்து அவர்கள் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும் தற்போது 10 அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை உறுதி செய்துள்ளனர்.
இந்த மெகா ஏலத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒரு சில முக்கிய வீரர்களை சற்றும் யோசிக்காமல் பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஏலம் துவங்கிய முதல் நாளில் முதல் வீரராக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசானை 15.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கியது.