
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று அசத்தியுள்ளது.
இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய வருண் சக்ரவர்த்தி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை தடுமாறச் செய்தார். அதிலும் குறிப்பாக இத்தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடிய வருண், ஒரு ஐந்து விக்கெட் ஹால் உள்பட 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முன்னதாக இவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
ஏனெனில் முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதேசமயம் வருண் சக்ரவர்த்தி இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் மட்டும் இடம்பிடித்திருந்தார். அப்போது டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் அத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.