
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்திய அவர் உலகிலேயே அதிக ஸ்டம்ப்பிங் செய்தவராக உலக சாதனை படைத்து இளம் வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார்.
அதே போல மிடில் ஆர்டரில் பெரும்பாலான போட்டிகளில் நங்கூரமாக நின்று எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் சிறந்த ஃபினிஷராகவும் கொண்டாடப்படுகிறார். அது போக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற தற்போதைய முக்கிய வீரர்கள் உருவாவதற்கு அப்போதே சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்து விடை பெற்றார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டாப் ஆர்டரில் விளையாடிய தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும் அணியின் நலனுக்காக தம்முடைய இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்ததாக சமீபத்தில் கௌதம் கம்பீர் தெரிவித்தார். ஒருவேளை தொடர்ந்து டாப் ஆர்டரில் விளையாடியிருந்தால் இந்நேரம் சொந்த பெயரில் நிறைய சாதனைகள் படைத்திருப்பார் என்று தெரிவித்த அவர், இந்தியாவின் வெற்றிக்காகவும் உலகக் கோப்பைகளை வெல்வதற்காகவும் தோனி அதை தியாகம் செய்ததாக பாராட்டியிருந்தார்.