
Indian Premier League: ஐபிஎல் தொடரின் 2026ஆம் ஆண்டிற்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
அதேசமயம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகள் ஒரு முடிவில்லை என மொத்தமாக 13 புள்ளிகளை மட்டுமே பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. எப்போது அதிரடிக்கு பெயர் போன சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறையில் சரிவர செயல்படாததே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.