
இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி11) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா அரைசதம் கடந்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக க்ளத்தியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் அவிஷ்காவுடன் இணைந்த குசால் மெண்டிஸும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த குசால் மெண்டிஸும் 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கமிந்து மெண்டிஸும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின் காயத்தை பொறுட்படுத்தாமல் மீண்டும் களமிறங்கிய பதும் நிஷங்கா 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 66 ரன்களை எடுத்திருந்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.