
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தன் அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கியது. கொழும்புவிலூள்ள சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - நூர் அலி ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமாளித்தார். அதன்பின் களமிறங்கிய ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான நூர் அலி 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 17 ரன்களிலும், நசிர் ஜமால் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மத் ஷா 91 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இக்ரம் அலிகில், கைஸ் அஹ்மத், ரெஹ்மான், நிஜாத் மசூத், சலீம் சஃபி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.