
இலங்கை அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டவர் நிரோஷன் டிக்வெல்லா. இவர், இலங்கை அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.45 சராசரியில் 1,604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.98 சராசரியில் 2,757 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு 28 டி20 போட்டிகளில் 480 ரன்களைச் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரோஷன் டிக்வெல்லாவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சமீபத்தில் முடிவடைந்த எல்பிஎல் தொடரின் போது ஊக்கமருந்து விதிகளை மீறியதன் காரணமாக நிரோஷன் டிகெவெல்லா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மேற்கொண்டு இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நிரோஷன் டிக்வெல்ல எந்த போட்டிகளிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கொக்கெய்ன் உட்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்தும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.