
இலங்கை அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 தொடரும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.
மேலும் இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புளாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெலும், ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், அகீல் ஹொசைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெறவில்லை.