
இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயன டி20 தொடரானது டிசம்பர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது அடுத்தமாதம் ஜனவரி 05ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில், பேட்டிங்கில் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சண்டிமால் ஆகியோருடன் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பனுகா ராஜபக்ஷா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.