
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேச அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்றம் 6ஆவது போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. மேலும் இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு எளிதாக தகுதிபெறும். அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் மிகப்பெரும் வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் கருணரத்னே 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பதும் நிஷங்கா 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.