
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க உள்ள இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் இலங்கை அணியின் உலக கோப்பை கனவுக்கும் பேராபத்து ஏற்பட்டு இருக்கிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி தங்களது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதனை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் இலங்கை விளையாட இருக்கிறது.
இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி ஒன்றிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் இலங்கை அணியில் ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சாளர்களுமே காயம் காரணமாக விலகி இருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முதலில் அந்த அணியின் துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இலங்கைக்கு மேலும் பேரதிர்ச்சியாக தற்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தில்ஷான் மதுசங்கா தற்போது காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.