
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமயம் இத்தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் இந்த தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக புதிய பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணியானது இம்மாத இறுதியில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவர் எதிர்வரவுள்ள இங்கிலாந்து தொடர் வரை அவர் இப்பதவியில் நீடிப்பார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.