நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி ஓய்வுக்குப் பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ரவி பிஷ்னோய் போன்ற சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய அனுபவம் வீரர்களும் இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளனர். இந்த அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சமீப காலங்களில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Trending
ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக மாறியதால் இந்திய கிரிகெட் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் டி20 கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமான முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக அதிரடியாக 330 ரன்கள் 183.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி தன்னை சிறந்த பினிஷராக நிரூபித்தார். அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அவர் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்தலாக செயல்பட்டு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
37 வயதுக்குப் பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்களையும் எடுத்த இந்திய வீரர் சாதனை படைத்து வரும் அவர் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற இளம் வீரர்கள் இருப்பதால் பினிஷிங் செய்வதற்காக மட்டும் அவரை அணியில் தேர்வு செய்வது சரியான முடிவல்ல என்று பரவலான கருத்துக்கள் வெளிவருகின்றன.
அந்த வகையில் தினேஷ் கார்த்திக் பினிஷெர் அல்ல பினிசிங் டச் கொடுப்பவர் என்ற வகையில் சமீபத்தில் கூறியிருந்த தமிழகத்தின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆசிய கோப்பையில் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரை தேர்வு செய்திருக்க மாட்டேன் என்று கூறினார்.
அப்போது அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் கிரண் மோர் தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய ஸ்ரீகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் பேசிய அவர், “என்னுடைய 11 பேர் அணியில் தினேஷ் கார்த்திக் இருப்பார். அவரை பெஞ்சில் அமர வைப்பதற்காக நான் தேர்வு செய்ய மாட்டேன். அவரிடம் நீங்கள் பினிஷர் வேலையை தாராளமாக கொடுக்கலாம்.
ஏனெனில் அவர் அந்த வேலையில் ஏற்கனவே இந்தியாவுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரை தவிர ரிஷப் பண்ட் எங்கும் ரன்கள் அடித்ததில்லை. அவர் எப்போதுமே கொஞ்சம் தடுமாறுகிறார். அதனால் கார்த்திக் என்னுடைய அணியில் இருப்பார். நான் தீபக் ஹூடாவை தேர்வு செய்ய மாட்டேன். தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரை விளையாட வைப்பேன்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now