
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தங்கள் தக்கவைத்த வீரர்களை தவிர்த்து மற்றவீரர்களை அணியிலிருந்து கழட்டிவிட்டனர். அதன்படி மற்ற வீரர்களுடன் இணைந்து, ஐபிஎல் அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்களும் கடந்தாண்டு நடைபெற்ற வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்றனர். அந்தவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்து ஏலத்தில் பங்கேற்றார்.
ஆனால் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்தில் எந்த அணியும் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்க முன்வரவில்லை. இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை ஸ்டீவ் ஸ்மித் இழந்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 2021ஆம் ஆண்டில் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இந்த இடைபட்ட காலத்தில் 103 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் ஒரு சதம், 11 அரைசதங்கள் உள்பட 2,485 ரன்களைச் சேர்த்துள்ளார்.