
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டிராவிஸ் ஹெட் 57 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 65 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் இமாலய மைல் கல்லை எட்டியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த ஆஸ்திரேலியாவின் நான்காவது வீரர் மற்றும் உலகின் 15ஆவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர்.