
இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், இன்று முதல் பயிற்சியை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.