கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்ப இதனை செய்ய வேண்டும் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து காயம் காரணமாக இந்திய அணியில் பல மாதங்களாக விளையாடாமல் இருந்தார். அதன் பின்னர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலும் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து ராகுல் வெறும் 22 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.
இதனால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பந்தை கொண்டு வர வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்துள்ளன. அதேபோன்று தொடர்ச்சியாக சொதப்பும் ராகுலை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேறு பேட்ஸ்மேனுடன் இந்திய அணி களமிறங்கலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
Trending
இந்நிலையில் கேஎல் ராகுலின் இந்த நிலைமை குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “தற்போது இந்திய அணி கே.எல் ராகுலுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஏனெனில் என்னை பொறுத்தவரை அவரின் பேட்டிங் டெக்னிக்கில் எந்த ஒரு குறையும் இல்லை. எனவே பேட்டிங் பயிற்சியாளர் அவரிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. ஆனால் அவர் தற்போது மனதளவில் சோர்வு அடைந்துள்ளார். எனவே நிச்சயம் இந்திய அணியின் மென்டல் கண்டிஷனிங் கோச்சான பாடி ஆப்டன் அவரிடம் சென்று பேசினால் அவரின் மன ஓட்டங்களை கட்டுப்படுத்தி மீண்டும் அவரின் மனநிலையை சமநிலைக்கு கொண்டு வர முடியும்.
ராகுலின் பேட்டிங் ஃபார்ம் என்னை பொருத்தவரை மோசமாக மாறவில்லை. ஆனால் அவர் மனதளவில் இறுக்கமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். எனவே பேடி ஆப்டன் ராகுலிடம் சென்று பேசினால் நிச்சயம் ராகுல் இயல்பு நிலைக்கு திரும்பி அவரின் பேட்டில் இருந்து ரன்கள் வரும். அதே போன்று இந்திய அணியின் நிர்வாகமும் தற்போதைக்கு அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான ஆதரவினை வழங்க வேண்டும். அதுவும் அவருக்கு மனதளவில் பெரிய தைரியத்தை அளிக்கும்.
தற்போது வரை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 5 ஆட்டங்களில் மூன்று போட்டிகளில் விளையாடிவிட்டது. எனவே இந்த மூன்று ஆட்டங்களிலும் ராகுல் ரன்களை எடுக்கவில்லை என்றாலும் அவருக்கு பதிலாக இந்த நேரத்தில் மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று. நிச்சயம் ராகுலால் மீண்டும் ரன்களை குவிக்க முடியும். எனவே அவரை மெண்டல் கண்டிஷனிங் கோச்சான பேடி ஆப்டனிடம் பேச வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now