
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மண்ணை கவ்வி 2013க்குப்பின் தொடர்ந்து 10ஆவது வருடமாக ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியது.
இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அஸ்வின் போன்ற வீரரை கழற்றி விட்டு சரியான அணியைத் தேர்வு செய்யாததும் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்கியதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அது போக பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதும் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட ஜாம்பவான்களாக போற்றப்படும் வீரர்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியதும் தோல்வியை கொடுத்தது.
அது மட்டுமல்லாமல் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் கடந்த வருடம் இதே போல இருதரப்பு தொடர்களில் அசத்தி நம்பர் ஒன் அணியாக முன்னேறியும் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் ரோஹித் சர்மா பதவி விலக வேண்டும் எனவும், காலம் கடந்த புஜாரா போன்ற வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கொந்தளிக்கின்றனர்.