
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை துவங்கியது. அதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் ஆஃப்கானிஸ்தானை தங்களுடைய 2ஆவது போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்தூள் தாகூர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. குறிப்பாக டெல்லி மைதானத்தில் நடைபெற்ற கடந்து போட்டியில் இலங்கையை அடித்து நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
அதன் காரணமாக பேட்டிங்க்கு சாதகமான அந்த மைதானத்தில் ஸ்பின்னர் வேண்டாம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் வேகத்தில் மிரட்டக்கூடிய முகமது ஷமியை தேர்ந்தெடுக்காமல் ரன்களை வாரி வழங்கக்கூடிய தாக்கூரை தேர்ந்தெடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.