SA20 League Final: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக்கின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி இந்த சீசன் முழுக்க அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி, அரையிறுதியிலும் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.
Trending
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 8 ரன்னுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு அதிரடி தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் டி பிருய்ன்(11), ரைலீ ரூசோ(19), காலின் இங்ராம்(17), ஜிம்மி நீஷம் (19) என அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தரப்பில் ரோலோஃப் வான் டெர் மெர்வே 4 வ்க்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் தொடக்க வீரர் டெம்பா பவுமா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஆடம் ரோஸிங்டன் எதிரணி பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தள்ளினார்.
இதற்கிடையில் ஜோர்டன் ஹார்மன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 30 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 57 ரன்களை அடித்த ஆடம் ரோஸிங்டன் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 26, ஜோர்டன் காக்ஸ் 7, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது.
இறுதியில் மார்கோ ஜான்சன் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தென் ஆப்பிரிக்க டி20 லீக்கின் முதல் சீசன் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now