
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி 72 ரன்களையும், அக்ஸர் படேல் 47 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அன்ரிச் நோர்ட்ஜே, கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக் 39 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களையும் சேர்த்த நிலையில், இறுதியில் டேவிட் மில்லர் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்த காரணத்தால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு 16 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அந்த ஓவரை வீசினார். ஓவரின் முதல் பந்தை டேவிட் மில்லர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடிக்க, அப்போது லாங் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் அபாரமான கேட்ச்சைப் பிடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்த காணொளியும் வைரலாகியுள்ளது.