
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியதுடன், இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி நேற்று நடைபெற்ற இத்தொடரின் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் ஷுப்மன் கில் 39 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களையும், ரியான் பராக் 26 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை சார்பில் மஹேஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா 26 ரன்களையும், குசல் மெண்டிஸ் 43 ரன்களையும் மற்றும் குசல் பெரேரா 46 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீர்ர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.