ஐபிஎல் 2025: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்க்க, இறுதில் நமன் தீர் 25 ரன்களையும், கார்பின் போஷ் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனித்துவ சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தன் மூலம், மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னாவின் சாதனை முறியடிப்பு
இப்போட்டியில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது 4000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 4000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக சுரேஷ் ரெய்னா 2881 பந்துகளில் 4ஆயிரம் ரன்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 2,714 பந்துகளை எதிர்கொண்டு அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் 4000 ரன்கள் எடுத்த வீரர்கள்
- ஏபி டி வில்லியர்ஸ் - 2658 பந்துகள்
- கிறிஸ் கெய்ல் - 2658 பந்துகள்
- சூர்யகுமார் யாதவ் - 2714 பந்துகள்
- டேவிட் வார்னர் - 2809 பந்துகள்
- சுரேஷ் ரெய்னா - 2881 பந்துகள்
சஞ்சு சாம்சனின் சாதனை சமன்
மேற்கொண்டு ஐபிஎல் போட்டிகளில் தொடக்க வீரர் அல்லாத பேட்ஸ்மேனாக அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சனின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். இந்த இரண்டு வீரர்களும் இதுவரை தலா 25 முறை இந்த சாதனையைச் செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் 43 முறை ஐம்பதிற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
- ஏபி டி வில்லியர்ஸ் - 43
- சுரேஷ் ரெய்னா - 40
- ரோஹித் சர்மா - 29
- சூர்யகுமார் யாதவ் – 25
- சஞ்சு சாம்சன் - 25
ஆரஞ்சு தொப்பி
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதன்படி இத்தொடரில் மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடிவுள்ள சூர்யகுமார் யாதவ் 61 என்ற சராசரியில் 418 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now