
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரம் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போத 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியிருந்தனர்.
பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.