
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் அரங்களில் பெரிதளவில் எந்த கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து - இலங்கை, வங்கதேசம் - அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான தொடர்களும் நடந்து முடிந்துள்ளன.
இதையடுத்து பெரிய தொடராக பார்க்கப்படுவது பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர்தான். அதுவும் இம்மாத இறுதியில் தான் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுகான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து தென அப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் 4ஆம் இடத்திலும், நியூசிலாந்தின் டெவான் கான்வே 5ஆம் இடத்தையும் தக்கவைத்துள்ளனர்.