ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் அசத்திய சூர்யகுமார் யாதவ்!
சௌராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 27ஆம் தேதியன்று தொடங்கிய 42ஆவது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின. எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வாசவடா 75 ரன்கள் எடுத்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா 4, யசஸ்வி ஜெய்ஸ்வால் 2 என இளம் அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 6/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை காப்பாற்ற முயன்ற கேப்டன் ரகானேவும் 24 ரன்களில் ஆட்டமிழந்ததால் 67/3 என மேலும் தடுமாறியது. ஆனால் முதல் விக்கெட் விழுந்ததுமே 3ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் எதிர்ப்புறம் விக்கெட் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் வழக்கம் போல ஆரம்ப முதலே தமக்கே உரித்தான அதிரடியான ஸ்டைலில் ரன்களை குவித்தார்.
Trending
குறிப்பாக அடுத்து வந்த மற்றொரு இளம் வீரர் சர்ஃப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்த அவர் தரமாக பந்து வீசிய சௌராஷ்டிரா பவுலர்களிடம் எளிதில் விக்கெட்டை தாரை வார்க்காமல் பேட்டிங் செய்தார். அதே சமயம் எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் இடையிடையே பவுண்டரிகளை பறக்க விட்டு ரன்களை குவித்த அவரது அட்டகாசமான பேட்டிங்கால் ஓரளவு மீண்டெழுந்த மும்பை 150 ரன்களை கடந்தது. அதில் ஒருபுறம் சர்ஃப்ராஸ் கான் மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து 14 பவுண்டரி 1 சிக்சருடன் சதத்தை நெருங்கிய போது துரதிஷ்டவசமாக கேட்ச் கொடுத்து 95 ரன்களில் அவுட்டானார்.
இருப்பினும் 4ஆவது விக்கட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை காப்பாற்றிய அவர் சதத்தை நெருங்கிய போது சுயநலமாக சிங்கிள், டபுள் ரன்களை எடுக்காமல் அணியின் நலனுக்காக பவுண்டரி அடிக்க முயற்சித்து 88.79 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அவுட்டானார். முன்னதாக இந்த ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை விளையாடிய முதல் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய அவர் 15 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்களை 112.50 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆட்டமிழந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now