
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடர் முதல் இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 3 போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்றது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரானது அக்டோபர் 06ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி தர்மசாலாவிலும், இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் தங்களை தயார்செய்யும் வகையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க இருக்கும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்கள் சொந்த மாநில அணிகளுக்காக விளையாடவுள்ளது. அந்தவரிசையில் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷான் விளையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.