
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும்தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியை மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்விகளைச் சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.
அதேசமயம் அந்த அணி ஒரு சில போட்டிகளில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சீசனில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த தொடர்ச்சியாக இதே தவறை செய்ததன் காரணமாக அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டிருந்தது.