
மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தரவரிசை பட்டியலில் மிகவும் உயர்வான இடத்தில் இருக்கக்கூடிய அணியாகவும், வணிகரீதியாக மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய அணியாகவும், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய கிரிக்கெட் அமைப்பாகவும் இருக்கக்கூடிய இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான தொடர்களில் தனது மோசமான செயல்பாட்டையே பல வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி இந்தியாவில் முழுதாக ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்லாவிட்டாலும் கூட போராடவாவது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இந்திய ரசிகர்களுக்கே வந்து விட்டது. இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமாகச் சரியான நேரத்தில் மிக முக்கியமான வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து கொண்டே இருப்பதுதான் இருக்கிறது. முக்கிய வீரர்களின் காயம் இந்திய அணியை மொத்தமாக முடக்கி போடுகிறது.
கடந்த டி20 உலக கோப்பையின் போது சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய அணியின் பௌலிங் யூனிட் லீடர் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இருவரும் எதிர்பாராத விதமாக காயம் அடைந்து விளையாடாமல் போனது அணியை தேர்வு செய்வதில் மிகப்பெரிய கடினங்களை உருவாக்கியது. இவர்களின் இழப்பு அந்த உலகக் கோப்பை தொடரில் வெளிப்படையாக எதிரொலித்தது.