
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. மொத்த நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகளில் எந்த 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 17 ரன்களுக்கும், ரோஸ்டன் சேஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் மற்றொரு தொடக்க வீரர் பிராண்டன் கிங்கும் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் அகீல் ஹொசைன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ஆகீல் ஹொசை 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஆதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸல் 14 ரன்களிலும், ரொமாரியோ ஷெப்ஃபெர்ட் 13 ரன்களிலும், அல்ஸாரி ஜோசப் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் விக்கெட்டை இழக்காமல் இருந்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.