
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஸ்ரேயாஸ் மொவ்வா அகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் கிர்டன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களையும், ஸ்ரேயாஸ் மொவ்வா 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங் மற்றும் பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியானது தொடக்கம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
முதல் 5 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் விளையாடிய அந்த அணி அதன்பின் சீரான இடைவேளையின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருகட்டத்தில் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த அந்த அணி, ஜார்ஜ் டக்ரேல் - மார்க் அதிர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீண்டு வெற்றிக்கு அருகில் சென்றது. ஆனால் இறுதியில் அதிரடியாக விளையாடிய மார்க் அதிர் 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.