
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய நிலையில், அணியின் ஸ்கோரும் ஆமை வேகத்தில் உயர்ந்தது. ஒருகட்டத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.