T20 WC 2024: இங்கிலாந்தின் சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கு ஆப்பு வைத்த ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் கடந்த போட்டியில் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறிய இருவரும் இன்றைய போட்டியில் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்படி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் 16 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Trending
இருப்பினும் ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் - கிளென் மேக்ஸ்வெல் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இப்போட்டியில் பொறுப்பாக விளையாடிவந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்லும் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 28 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அனாலும் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸும் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ வேட் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பில் சால்ட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களைச் சேர்த்து ஆடம் ஸாம்பா வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 42 ரன்களில் ஸாம்பா பந்துவீச்சில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய வில் ஜேக்ஸ் 10 ரன்களுக்கும், ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அணியின் துணைக்கேப்டன் மொயீன் அலி அதிரடியாக விளைடாடிய நிலையில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களிலும் லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன்களிலும் என ஆட்டமிழந்தர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now